கற்கை நெறி மதிப்பளிப்பு 2017

By / 12. June 2024 / Allgemein / No Comments
கற்கை நெறி மதிப்பளிப்பு 2017
மாணவர் கற்கை நெறிச் செயற்திட்டத்திற்கான மதிப்பளிப்பு 2017பேர்லின் வாழ் இளந்தமிழ் மாணவர்கள் கடந்த குளிர்கால விடுமுறையின் போது (30.01.17-03.02.2017)  உத்தியோக பூர்வமான வாழிட சமூகத்தினருடன் இணைந்து “இனவாதம்” எனும் கருப்பொருளைக் கொண்டு, இரு பிரிவுகளாக இணைந்து செயற்திட்டப் பட்டறையை மேற்கொண்டிருந்தனர். இதில் அகவை 14-18 வரையிலான 40 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக, வெவ்வேறு கருப்பொருள் கொண்டு நடாத்தப்படும் இப்பயிற்சிப்பட்டறை இவ்வாண்டும் சிறப்பாக நடைபெற்றது. எனவே இந்த செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 19.06.2017 திங்கட்கிழமை அன்று Rathaus Charlottenburg மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் Charlottenburg பிராந்திய ஆளுநர் திரு.Oliver Schruoffeneger அவர்களும், பிற அரச அலுவலர்களும் கலந்து சிறப்பித்தனர்.

திரு. Oliver Schruoffeneger அவர்கள் “இனவாதம் “மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய கண்காட்சிப் தொகுப்பைக் திறந்து வைத்ததோடு, இச்செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களிற்கு சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளித்தார். தொடர்ந்து இம்மாணவர்களால் உருவாக்கப்பட்ட காணொளியும் திரையிடப்பட்டு பின், கலந்துரையாடலும் இடம்பெற்றது. மேலும் இக்கண்காட்சித் தொகுப்பை Rathaus Charlottenburg மண்டபத்தில் ஒரு மாத காலப் பகுதி வரை ஆர்வலர்கள் பார்வையிடலாம்.

தரமான திட்டமிடலுடன் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு சிற்றுண்டி விருந்துபசாரத்துடன் இனிதே நிறைவேறியது. நமது பண்பாட்டு ஆடைகளுடன் கலந்து சிறப்பித்த மாணவர்களின் ஒழுக்கமும், பெற்றோரின் ஒத்துழைப்பும் இம் மதிப்பளிப்பு நிகழ்வை மேலும் மெருகூட்டின. எனவே இவ்வாறான பன்முக குமுகாயத்துடனான உத்தியோக பூர்வ செயற்பாடுகள் மூலமே எமது மொழியின் பெருமையையும், தாயகத்தின் அருமையையும் வெளி உலகிற்கு கொணர முடியுமென்பது திடமான உண்மை ஆகும்.

“கடமையைச் செய் பலனை எதிர் பாராதே”

நன்றி

தமிழால் தரணியில் இணைந்திடுவோம்

நிர்வாகம்
ஜேர்மன் தமிழர் ஒன்றியம்