அரையாண்டுத்தேர்வு 2022/23

By / 12. June 2024 / Integration, Religion, School / No Comments
அரையாண்டுத்தேர்வு 2022/23

உலகில் தோன்றிய மனிதன் ஒலிகளுக்கு உயிர்கொடுத்தான் உருவானது அவன் வாய்மொழி. உருவம் கொடுத்தான் பிறந்தது அவன் தாய்மொழி. தாய்மொழியில் சிறப்பு ‘ழ’ கரம் சேர்த்தான் சிறந்தது தமிழ்மொழி. சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையும் தனித்தன்மையும் கொண்ட தமிழ்மொழி இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் கொண்டு காலந்தோறும் வளர்ச்சிப் பெற்று உயர்தனிச் செம்மொழியாகச் சிறந்தோங்கி இன்று கணினியிலும் உலாவருவது தமிழர்க்குப் பெருமிதம்.

இனிமையும், எளிமையும், செம்மையும் கொண்ட தமிழைப் புலம்பெயர் நாடுகளில் வாழும் சூழ்நிலையிலும், நம் சந்ததியர் கற்றுச் சிறக்க வேண்டுமென்ற தொலை நோக்குப் பார்வையோடு, சுமார் நாற்பது ஆண்டுகளாக இயங்கிவரும் ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் ஊடாக நடைபெறும் பேர்லின் தமிழாலயத்தில், அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாகவும் தமிழுணர்வோடும் முப்பது ஆண்டுகளாகக் கற்பித்து வருகிறோம்.

2022-23 கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு தமிழும் சைவநெறியும் என்ற பொருண்மையில் 18.02.2023 சனிக்கிழமை அன்று சீரிய முறையில் நடைபெற்றது. இத்தேர்வில் மழலையர்நிலை வகுப்பு முதல் பன்னிரண்டு வரையான வளர்நிலை வகுப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதி தம்திறனை வெளிப்படுத்தினர்.

எமது தமிழாலயத்தின் நிர்வாகி திரு பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியம் அவர்களின் தலைமையிலும், மேற்பார்வையிலும் குறிக்கப்பட்ட கால அட்டவணைப்படி, நேர்மையுடனும், நடுநிலையோடும் தேர்வுகள் நடத்தப்பெற்றன. மாணவர் அனைவரும் மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் தேர்வெழுதியதைக் கண்ட போது, எம்கற்பித்தல் முறையும், செயற்பாடுகளும், பெற்றோர் ஒத்துழைப்பும் மாணவர்க்குச் சரியாகக் கிடைத்துள்ளன என்பதை உணர முடிந்தது.

இனிவரும் காலங்களிலும் மேலும் சிறந்த நெறிப்படுத்தலில் மாணவர்கள் தமிழ்மொழி, சைவநெறி ஆகியவற்றைக் கற்றுத் தெளிந்து கடைப்பிடித்து மிளிர அனைவரும் ஒருமித்து செயற்படுவோமென்ற உறுதிகொள்வோம்.

‘தமிழ்’ என்ற சொல்லில் அமைந்திருக்கும் மூவினம் போன்று தமிழரும் தமிழெனும் மந்திரச் சொல்லால் ஒருங்கிணைவோமாக, வளரும் இளைய தலைமுறை தமிழ்மொழியுடனும், சைவநெறியுடனும், பண்பாட்டுடனும், சுய அடையாளத்துடனும் எங்கும் வேரூன்றி விருட்சமாக நாம் துணைநிற்ப்போமாக!.

வாழ்க வையகம்! வாழிய செந்தமிழ்!

தமிழால் தரணியில் இணைந்திடுவோம்!

நிர்வாகம்,
தமிழாலயம் பேர்லின்