சிறப்பு கண்காட்சி 2018

By / 22. January 2025 / Allgemein / No Comments
சிறப்பு கண்காட்சி 2018
ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான, அரச சார் பல்லின குமூகத்தாருடன் – பேர்லின் தமிழ் மாணவர்கள் இணைந்த பயிற்சிப்பட்டறைகள் ஒவ்வோர் ஆண்டும் ஒருவார காலப்பகுதி இடம்பெற்று வருவது யாமறிந்ததே. அந்த வகையில் கடந்த ஆண்டு 30 ஜனவரி 2017 முதல் 03 பெப்ரவரி 2017 வரையான குளிர்கால விடுமுறையின் போது “இனவாதம்” எனும் கருப்பொருளைக் கொண்டு, 40 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து இச்செயற்பட்டறையை மேற்கொண்டனர்.இப்பட்டறையில் பங்குபற்றிய மாணவர்களுக்கான மதிப்பளிப்பு கடந்த 19 யூன் 2017 திங்கட்கிழமை அன்று Rathaus Charlottenburg மண்டபத்தில் Charlottenburg பிராந்திய ஆளுநர் திரு. Oliver Schruoffeneger தலைமையில் இடம்பெற்றதோடு, மாணவர்களின் ஆக்கங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், சிறப்புக் கருத்தரங்கும் இடம்பெற்றது.மேலும் இம்மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயற்திட்டத்தை கௌரவிக்கு முகமாக, இவ்வாண்டும் 31 ஜனவரி 2018 புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மாபெரும் மண்டபத்தில் சிறப்பு வரவேற்பும், கண்காட்சியும் இடம்பெற்றது. இக்கண்காட்சியில் எமது மாணவர்களின் ஆக்கங்களுடன், இதர பல்லின மாணவர் குழுக்களின் ஆக்கங்களும் பிரிவு பிரிவாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தக் கண்காட்சியை நாடாளுமன்ற ஆளுநர் திரு Ralf Wieland அவர்கள் உட்பட்ட அரச செயலக பிரதிநிதிகளும் கல்விமான்களும் பெருந்தொகையான மக்களும் கலந்து பார்வையிட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே வாழிட மொழியுடன் தாய்மொழி கலந்த இத்தகைய ஆக்க பூர்வமான செயற்பாடுகளின் ஊடாக, தமிழ் மொழி முன்னணியில் நிற்பதுடன், தமிழ் மாணவர்களின் திறமைகளையும் அரச சார் ரீதியாக வெளிக்கொணர்வதற்கு ஓர் அரிய சந்தர்ப்பமாகும். இனி வரும் காலங்களில் இது போன்ற கற்கைநெறிகளில் கலந்து மாணவர்கள் தமது மொழித்திறமையை விருத்தி செய்வதுடன், இச் செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கு எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

“கடமையைச் செய் பலனை எதிர்பாராதே”

நிர்வாகம்
ஜேர்மன் தமிழர் ஒன்றியம்