பொங்கல் விழா 2018!
உழந்தும் உழவே தலை”
எனும் குறட்பாவிற்கிணங்க தொழில்களுக்கெல்லாம் முதற்கரணியமாய் விளங்கும் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாயும், உலகில் வாழ் உயிரிகளின் உயிரூட்டத்திற்கும் கரணியமாகவும் விளங்கும் கதிரவனுக்கு நன்றி பாராட்டி, முற்றத்தில் பொங்கலிட்டு, தலைவாழை இலை விரித்து, பொங்கல் படைத்துப் போற்றப்படும் திருநாள் தைத்திருநாள் ஆகும். இதுவே தமிழர் புத்தாண்டுமாகும்.
நெல்மணிகள் விளைந்து, முக்கனிகளும் முற்றி ,எங்கும் பசுமையாக விளங்கும் தைத்திங்கள் முதல் நாளில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், எமது தமிழாலயத்தால் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வரும், இப்பொங்கல் விழா 25 வது தடவையாக 15 யனவரி 2018 திங்கட்கிழமை அன்று Lichternrade மண்டபத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
அன்று மாலை 6.30 மணியளவில், எமது தமிழாலயத்தின் உதவி நிர்வாகி திரு.கதிர்காமநாதன் செந்தூரன், பொருளாளர் செல்வி சஜிதா நித்தியானந்தன் அவர்களால் மங்கல விளக்கேற்றி, விழா ஆரம்பித்துடன் அகவணக்கம், தமிழாலய கீத்த்தைத் தொடர்ந்து, தமிழ்த்திறன் போட்டி செயற்பாட்டாளர் செல்வி ஆர்த்தி பாஸ்கரன் அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து தமிழாலய மாணவர்களின் பொங்கல் நிகழ்ச்சிகள் ஆற்றப்பட்டது.அந்த வகையில் செல்வன் ஆர்த்திகன் மதனாகரனின் பஞ்சபுராணத்துடன் ஆரம்பித்து மழலைகள் பாடல்கள், கவிதை நிகழ்வு, நடனங்கள், நாடகங்கள், பட்டிமன்றம், வில்லிசை, சங்கீத இசைக்கச்சேரி ஆகிய நிகழ்வுகளுடன் எமது தமிழாலயத்தால் ஒவ்வோர் ஆண்டும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகளில் 2017 ஆம் ஆண்டிற்குரிய போட்டிகளில் மனனப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களின் உரையாற்றல்கள், கவிதைகள் மற்றும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, திருக்குறள் நுண்கலைப் பரீட்சை 2017 ல் சித்தியடைந்த மாணவர்களின் பரிசளிப்பு போன்றன இடம்பெற்றன. இன்றைய விழாவில் கலைகளுடன் மாணவர்களின் மொழியாற்றல் அரங்கம் முழுவதையுமே தமிழ்மழையால் நனைத்ததுடன் அவையோரின் பெரு வரவேற்பையும் பெற்றிருந்தது.
ஏறத்தாழ மூன்று மணித்துளிகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த இனிய மாலைப்பொழுது, இறுதியில் பொங்கல் விழாவிற்குத் தேவையான அத்தனை ஒத்துழைப்புகள் வழங்கிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகத்தினர் அனைவருக்கும் நிர்வாக செயற்பாட்டாளர் சனுசா திருக்குமார் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே நிறைவு கண்டது.
ஆதவனைப் போற்றவே
ஆண்டு முதல் நாளிலே
பொங்கல் பொங்கிப் படைப்போம்
நம் உறவில் உலகை அளப்போம்
சுற்றம் சூழக் கூடி நாமுமே
பண்பாடி வாழ்த்தி நாளுமே
நன்றி சொல்லுவோமே
நாம் நன்றி சொல்லிவோமே.
தமிழால் தரணியில் இணைந்திடுவோம்
நன்றி,
நிர்வாகம்,
தமிழாலயம் பேர்லின்