விடை பெறும் 2017 இல்…

By / 19. April 2024 / Allgemein, Integration, School, Sports / No Comments
விடை பெறும் 2017 இல்…

“தமிழர் என்றோர் இனமுண்டு-தனியே அவர்க்கோர் குணமுண்டு” எனும் கவிஞர் நாவண்ணன் கூற்றிற்கிணங்க தாய்மொழியினாலும், நாகரீக, பண்பாட்டு விழுமியங்களாலும் உயர்ந்து 24 அகவை நிறைவில் மிடுக்கோடு நிற்கிறது பேர்லின் தமிழாலயம்.

அந்த வகையில் 07 யனவரி 2017 சனிக்கிழமை அன்று புதிய ஆண்டிற்கான தமிழ்க்கற்கை நெறிகளுடன் ஆரம்பித்த தமிழாலயம் 14 யனவரி 2017 சனிக்கிழமை அன்று தமிழர் விருந்தோம்பும் பண்டிகையான பொங்கல் விழாவை 24 வது தடவையாக கொண்டாடி மகிழ்ந்தது.

தொடர்ந்து 28 யனவரி 2017 சனிக்கிழமை அன்று 2016/2017 கல் வியாண்டிற்கான அரையாண்டுத்தேர்வு இடம்பெற்றது. எமது நிர்வாகத்தினரின் நேரடிக் கண்காணிப்பில் குறித்த நேர அட்டவணைப்படி இத்தேர்வு இடம்பெற்றது.

அடுத்ததாக கடந்த 2014 ம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் வாழிட அரசசார் அமைப்புகளின் ஒருங்கிணைப்பின் கீழ் வெவ்வேறு கருப்பொருட்களைக் கொண்டு பேர்லின் தமிழ் மாணவர்களை இணைத்து நடைபெற்று வரும் “செயற்திட்டப்பட்டறை” இவ்வாண்டும் “இனவாதம்” எனும் கருப்பொருளைக் கொண்டு நடாத்தப்பட்டது. இப்பட்டறையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை பல்லின குமூகத்தார் மத்தியில் வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பல்விதமான இடையூறுகளிற்கும், விமர்சனங்களிற்கு மத்தியிலும் எமது நிர்வாகத்தினரின் நீண்டகால உழைப்பினால் எமது தமிழாலயத்திற்கு அரச ரீதியான அங்கீகாரம் மே 2017 ல் எழுத்துருவில் கிடைக்கப்பட்டது. இது தமிழாலய வரலாற்றில் ஆணித்தரமாக பதிவிட வேண்டிய மாபெரும் வெற்றியாகும்.

மேலும் ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் கீழ் செயற்பட்டு வரும் அனைத்து விடயங்களையும் உலகளாவிய ரீதியில் பகிரவென www.detagegermany.de எனும் இணையத்தளம் எமது தமிழாலய 24வது ஆண்டு தினமாகிய 14 ஏப்ரல்2017 அன்று உருவாக்கப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் நிர்வாகி, ஆசிரியர்களுக்கிடையிலான கலந்துரையாடலும், தேநீர் விருந்தும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எமது இணையத்தளம் பற்றிய விளத்தங்கள் கணினிமுறையில் தெளிவுபடுத்தப்பட்டது.

இதற்கு அடுத்ததாக ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் கீழ் இயங்கும் தமிழாலய செயற்பாடுகளுடன் இதர செயற்பாடுகளில் பொதுப்பணியாற்றும் இளையோர்களுக்கு, அவர்களது சேவை நலன் பாராட்டி, 10 மே 2017 புதன்கிழமை அன்று Rotes Rathaus மண்டபத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட விழாவில் பேர்லின் மாநகர முதல்வர் திரு. Michael Müller அவர்களின் கையெழுத்திடப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அடுத்தபடியாக “இனவாதம்” செயற்திட்டத்தில் பங்காற்றிய மாணவர்களின் தொகுப்புகள் 19 யூன் 2017 திங்கட்கிழமை அன்று Charlottenburg அரசசெயலக மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, நகர முதல்வர் திரு. Oliver Schruoffeneger அவர்களால் இச்செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்ததுடன், கருத்தரங்கும் நடாத்தப்பட்டது. இவ்வாறு பல்லின அரச்சார் அமைப்புகளுடன் இணைந்து எமது மொழியின் வலிமையை நிலைநாட்டுவதே சமகாலத் தேவையாகும்.

இதனைத்தொடர்ந்து 2016/2017 கல்வியாண்டிற்கான 01 யூலை 2017 சனிக்கிழமை அன்று புலன்மொழித் தேர்வும், 15 யூலை 2017 சனிக்கிழமை அன்று எழுத்துருவிலான பொதுத்தேர்வும், இடம்பெற்றது. இத்தேர்வுகள் தமிழாலய நிர்வாகியினதும், ஆசிரியர்களினதும் நேர்த்தியானதும், ஒழுங்கானதுமான கண்காணிப்பில் இடம்பெற்றதோடு 2016/2017 கல்வியாண்டு நிறைவு பெற்றது.

கோடைகால விடுமுறையைத் தொடர்ந்து 2017/2018 கல்வியாண்டு 09 செப்டம்பர் 2017 சனிக்கிழமை அன்று பல புதிய மழலைகளின் வரவுடன் ஆரம்பமானது. “உடற்பயிற்சியினால் உள்ளம் உறுதியடையும்” எனும் கூற்றின் அடிப்படையில் நமது குழந்தைகளின் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தும் இல்லங்களிற்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 17 செப்டம்பர் 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று Stadion Wilmersdorf விளையாட்டுத்திடலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் தமது சிறப்புத்திறன்களை வெளிப்படுத்திய வீரர்களுக்கு நடுவர்களாக செயற்பட்டவர்கள், தமிழாலய ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகி ஆகியோரால் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் கல்வி, கலைகளுக்கு அதிபதியான கலைமகளை வணங்கும் பொருட்டு 24 வது வாணி விழா 02 ஒக்டோபர் 2017 திங்கட்கிழமை அன்று மிகு பக்தி பூர்வமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் போது கடந்த 2015/2016 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்விலும், 2016 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திறன் போட்டியிலும் கலந்து சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குத் தமிழாலய ஆசிரியர்களால் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து 04 நவம்பர்17 சனிக்கிழமை அன்று பெற்றோர், நிர்வாகிகளிற்கிடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, கடந்தகால கணக்கறிக்கைகள் வாசிக்கப்பட்டதோடு அனைத்து விடயங்கள் சம்பந்தமான விளத்தங்களும் வழங்கப்பட்டு, எதிர்வரும் வெள்ளிவிழா சம்பந்தமான கருத்துகளும் பரிமாறப்பட்டது.

மேலும் தமிழ்மாணவர்களின் தமிழ்த்திறனை வெளிக்கொணரும் தமிழ்த்திறன் போட்டி 02 டிசம்பர் 2017 சனிக்கிழமை அன்று மிகவும் நேர்த்தியாகவும், எளிமையாகவும், ஒழுங்காகவும் இடம்பெற்றது. இத்திறன் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐந்நூறிற்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்காற்றியதோடு, சுமார் பத்து மணித்துளிகள் இப்போட்டிகள் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் பங்காற்றிய மாணவர்களுக்கு தமிழாலய ஆசிரியர்களால் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இவ்வாறு கல்வி, கலைகளில் கண்ணாக செயற்பட்டு வரும் எமது நிறுவனம் அரசசார் கலந்துரையாடல்களிலும், கருத்தமர்வுகளிலும் கலந்து மேலும் பல நன்மதிப்புகளைப் பெற்றுள்ளது. இது போன்று எதிர்காலத்தில் இடம்பெறவிருக்கும் இன்னும் பல விடயங்களின் அறிமுகத்தை எமது இணையத்தளத்தினூடாக உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

இறுதியாக 23 டிசம்பர் 2017 அன்று வழமையாக இடம்பெற்ற காலை ஒன்றுகூடலைத் தொடர்ந்து எமது தமிழாலய நிர்வாகி திரு. பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியம் அவர்களால் இவ்வாண்டு எமது நிர்வாகத்தால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயற்பாடுகளும் நினைவில் கொண்டு வரப்பட்டு, தமிழ்த்திறன்போட்டி 2017 மனனப் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு முதலிடம் பெற்ற மாணவர்கள் எதிர்வரும் வெள்ளிப்பொங்கல் விழா(25) 2018ல் தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து உலகமே மகிழ்வாக கொண்டாடி வரும் இயேசு பாலன் பிறப்பை முன்னிட்டு, எமது தமிழாலய மாணவர்களும் பேருவகை கொள்ளும் வகையில் செல்வி. சௌமியா சௌந்தரநாதன் அவர்களால் “பாலன் பிறப்பு” கவிதையும் வாசிக்கப்பட்டு, அனைவருக்கும் இனிப்புப் பண்ணியங்கள் வழங்கப்பட்டதோடு, மலரப்போகும் 2018 புத்தாண்டு அனைவருக்கும் நன்றாக அமையட்டும் எனும் ஆசிச்செய்திகளோடு 2017 ம் ஆண்டிற்குரிய கல்வியாண்டு இனிதே விடை பெற்றது.

“தமிழால் தரணியில் இணைந்திடுவோம்”

நிர்வாகம்
தமிழாலயம் பேர்லின்,
ஜேர்மன் தமிழர் ஒன்றியம்.