தமிழாலய விளையாட்டுப்போட்டி 2017

By / 22. January 2025 / Allgemein, Sports, Topnews / No Comments
தமிழாலய விளையாட்டுப்போட்டி 2017

தமிழாலயத்தின் வருடாந்த இல்லங்களிற்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 17.09.2017 ஞாயிற்றுக்கிழமையன்று Wilmersdorf விளையாட்டரங்கில் நடைபெற்றது.பேர்லின் மாநகரில் புகலிடம் தேடிய ஈழத்தமிழ் நலன்விரும்பிகளின் கடும் முயற்சிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ்ப்பள்ளியானது (14.04.1993) பல விபரீதமான விமர்சனங்களுக்கு மத்தியிலும் முதல் தமிழாலயம் என்று பெருமை கொள்வது யாவரும் அறிந்த விடயமாகும். அந்த வகையில் தனது 24வது விளையாட்டுப்போட்டியை மிகச்சிறப்பாக நடாத்தி பேருவகை கொள்கிறது.

திட்டமிட்டபடி சுடர் ஏற்றல், கொடி ஏற்றல், அகவணக்கம், உடற்பயிற்சி, வரவேற்புரை ஆகிய ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பித்த விளையாட்டுப்போட்டி மழலைகள், சிறுவர்கள், இளையோர்கள், பார்வையாளர்களின் விளையாட்டு மிகுதிறனால் அரங்கத்தை அலங்கரித்தது.

இவ்விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்களை அன்னைத்தமிழ்மண் மீட்பிற்காக தம்மை அணைத்துக்கொண்ட தியாகி திலீபன், மூத்த தளபதி கேணல்.கிட்டு, அன்னை பூபதி ஆகிய மூவரையும் நினைவு கூருமுகமாக உருவாக்கப்பட்ட இல்லங்களைச் சேர்ந்தவர்களாக வகுக்கப்பட்டு விளையாட்டுகள் அனைத்தும் இடம்பெற்றன.

ஓட்டம், அஞ்சல் ஓட்டம், கயிறு அடித்தல், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், குண்டு எறிதல், குழு விளையாட்டுகள் என நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பெரும்பான்மையான போட்டியாளர்கள் கலந்து தமது விளையாட்டாற்றலை வெளிப்படுத்தினர். அத்துடன் இதர நிகழ்வுகளாக இல்ல அலங்கரிப்பு, விநோத உடை நிகழ்வுகள், பார்வையாளர் நிகழ்வுகள் போன்றவை மேலும் அணிசேர்த்தன.

மேலும் இல்ல அலங்கரிப்புகளிற்கான முதலாம் இடத்தை திலீபன் இல்லமும், இரண்டாம் இடத்தை அன்னை பூபதி இல்லமும், மூன்றாம் இடத்தை கிட்டு இல்லமும் பெற்றுக் கொண்டது.விநோத உடைக்கான நிகழ்வில் முதலாம் இடத்தை திலீபன் இல்லமும், இரண்டாம் இடத்தை அன்னை பூபதி இல்லமும், மூன்றாம் இடத்தை கிட்டு இல்லமும் பெற்றுக் கொண்டது. மற்றும் பார்வையாளர் நிகழ்வுகளான ஓட்டம், கயிறு இழுத்தல் போன்ற போட்டிகளும் பலத்த கரகோசங்களிற்கு மத்தியில் சிறப்பாகவும் மகிழ்வாகவும் நடைபெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் நடுவர்களாலும், தமிழாலய ஆசிரியர்களாலும் உடனுக்குடன் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. இந்நாளில் மண்வாசனை வீசும் அறுசுவை உணவுகளும் அனைவரும் வாங்கி உண்டு மகிழ்த்திருந்தனர். இறுதியாக இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்து சிறப்பித்த சிறந்த வீரர்கள் மதிப்பளிப்புடன், 2017 ம் ஆண்டிற்குரிய இல்லங்களிற்கான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியில் முதலாம் இடத்தை திலீபன் இல்லமும், இரண்டாம் இடத்தை கிட்டு இல்லமும், மூன்றாம் இடத்தை அன்னை பூபதி இல்லமும் பெற்றுக் கொண்டது.

மிக விரைவில் எமது தமிழாலயம் வெள்ளிவிழாக் காண இருக்கும் தருணத்தில் இவ்விளையாட்டுப் போட்டியானது பெருந் திரளான பார்வையாளர் கரகோசத்தினாலும், நடுவர்களின் நேர்த்தியான திட்டமிடலாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்புகளினாலும், ஆசிரியர்களின் உயரிய கடமைகளினாலும், விளையாட்டுப் பிரிவினரதும் நிர்வாகத்தினரதும் நெறிப்படுத்தப்பட்ட திட்டமிடலினாலும் உரிய நேரத்தில் மிகச்சிறப்பாக நிறைவேறியது. அத்துடன் இந்நிகழ்விற்கு பல்விதமான ஒத்துழைப்புகள் வழங்கிய அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பதோடு மேலும் தமிழாலய வளர்ச்சியானது பெரு விருட்சம் காண ஒருங்கிணைந்து அரும்பாடுபடுவோமாக.

தமிழால் தரணியில் ஒன்றிடுவோம்.