பேர்லின் நகராட்சி மையத்தினால் கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் 2017

By / 22. January 2025 / Allgemein / No Comments
பேர்லின் நகராட்சி மையத்தினால் கிடைக்கப்பெற்ற அங்கீகாரம் 2017

பேர்லின் நகரில் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ்க் குமுகாயத்திற்கு, பல்வேறு வழிகளில் நற்பணிகள் ஆற்றி வரும் ஜேர்மன் தமிழர் ஒன்றியம் எனும் அமைப்பு தற்போது பல்வேறு வழிகளில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது.

அந்த வகையில் இவ்வமைப்பின் செயற்பாடுகள் அனைத்தும், இந்த நாட்டுச் சட்ட ஒழுங்குகளிற்கு அமைய செயற்பட்டு வந்தமை யாமறிந்த வெளிப்படையான உண்மை. இந்த ஆக்கபூர்வமான விளைவுகளின் கரணியமாக, எமது தாய்மொழி, கலை, கலாச்சாரம் போன்ற அனைத்துச் செயற்பாடுகளுக்கும், பேர்லின் நகராட்சி மையத்தினால் உத்தியோக பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எழுத்துருவிலான பத்திரம் 02.06.2017 வெள்ளிக்கிழமை அன்று கிடைக்கப்பெற்றது. அது மட்டுமல்லாமல் ஜேர்மன் தமிழர் ஒன்றித்தின் கட்டமைப்பின் கீழ் பொதுப்பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைத்துச் செயற்பாட்டாளர்களும் நகராட்சிப்பேரவையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றமை என்பதும் மிகவும் பெருமைக்குரிய விடயம்.

நீண்ட காலமாக எடுத்த முயற்சிகளின் திருவினையான இந்த விடயங்களை 03.06.2017 சனிக்கிழமை அன்று எமது தமிழாலயத்தின் வழமையான ஒன்றுகூடலின் போது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் தமிழாலய நிர்வாகி திரு.பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியம் அறிவித்திருந்ததோடு, மட்டுமல்லாமல் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்வித்திருந்தார். அனைவரும் பலத்த கரகோசத்தின் மத்தியில் இன்முகத்தோடு இவ்விடயத்தை வரவேற்றனர்.

எனவே பேர்லின் மண்ணில் பன்முக குழுமியங்களிற்கு மத்தியில் வாழும் நம் இளந்தலைமுறையினர், தலை நிமிர்ந்து தமது தமிழ் நற்பணிகளை ஆற்றுவதற்கு இவ்வங்கீகாரம் பேருதவியாக இருக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை.

மேலும் ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் அனைத்து செயற்பாடுகளையும் www.detagegermany.de எனும் இணையத்தளத்தினூடாக உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம் என்பதனையும் அறியத் தருகின்றோம்.

நன்றி

தமிழால் தரணியில் இணைந்திடுவோம்

நிர்வாகம்
ஜேர்மன் தமிழர் ஒன்றியம்