தை முதல்நாளில் மலர்ந்திட்ட தமிழர் திருநாள் 2017…

By / 22. January 2025 / Allgemein / No Comments
தை	முதல்நாளில் மலர்ந்திட்ட தமிழர் திருநாள் 2017…

நிகழும் மங்களகரமான துர்முகி வருட தமிழ்ப்புத்தாண்டாம் தைத்திருநாள் இவ்வாண்டும் உலகத்தமிழர்களால், மகிழ்ச்சி பொங்க வரவேற்கப்பட்டது. அந்த வகையில் பேர்லின் தமிழாலயத்தால் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருநாள் 14.01.17 சனிக்கிழமை அன்று 24வது தடவையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவானது ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகி, பாலர் நிலை முதல் வளர்தமிழ் 12 வரை கல்வி கற்கும் மாணவர்களினால் ஆற்றப்பட்ட கலை நிகழ்வுகளாலும், ஆசியர்களின் நெறிப்படுத்தல்களாலும், நிர்வாகத்தினரது ஒருங்கிணைப்புகளாலும், பெற்றோரின் ஒத்துழைப்புகளாலும், அரங்கம் நிறைந்த பார்வையாளர்களின் பெரும் வரவேற்பினாலும் சிறப்பாக அரங்கேறியது. பாடல்கள், நடனங்கள், உரையாற்றல்கள், கவிதைகள், பட்டிமன்றம், வில்லுப்பாட்டு என அத்தனை நிகழ்வுகளும் தரம் வாய்ந்தவையாக அமைந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இது மட்டுமல்லாமல் பண்டைத்தமிழன் விருந்தோம்பல் பண்பாட்டைச் சிறப்பிக்கும் வகையில் அனைவருக்கும் அறுசுவை உணவுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் “நன்றி மறத்தல் நன்றன்று” எனும் முதுமொழிக்கிணங்க இறுதி நிகழ்வாக நன்றி கூறுதலுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

உலகில் உள்ள ஜீவராசிகள் உயிர் வாழ்வதற்கு தேவையான மழையையும், வெயிலையும் தந்திடும் கதிரவனைப் போற்றவும், உண்ண உணவு தந்திடும் உழவரை வாழ்த்தவுமென நம் முன்னோரால் “வாழையடி வாழையாக” பேணி வரும் பெருநாள் தைத் திருநாள்.

தை முதல் நாளன்று முற்றத்தில் கோலமிட்டு, விளக்கேற்றி, பொங்கலிட்டு, முக்கனிகளும், பண்ணியங்களும் சேர்த்து கதிரவன் காலிக்கும் நேரத்தில் படையலிட்டு, நன்றி கூறி வழிபட்டு, சுற்றத்தாருடன் விருந்துண்டு மகிழும் நன்னாளே தைப்பொங்கல் பண்டிகையாகும். எனவே இத்தகைய பாரம்பரிய திருநாட்களை தொடர்ந்தும் பேணி வருவது தமிழர் வரலாற்றில் பெருமைக்குரிய விடயமாகும்.

“தை பிறந்தால் வழி பிறக்கும்”

நன்றி
நிர்வாகம்
தமிழாலயம்