அகவை இருபத்தொன்று நிறைந்த பெருமிதத்தில் பேர்லின் தமிழாலயம்…

By / 12. June 2024 / Allgemein / No Comments
அகவை	இருபத்தொன்று	நிறைந்த பெருமிதத்தில் பேர்லின்	தமிழாலயம்…

ஜேர்மனிய நாட்டின் தலைநகர் பேர்லின் நகரில் புகழ் பூத்த பேர்லின் தமிழாலயத்தின் 21வது அகவை நிறைவு விழா 14.04.14 திங்கட்கிழமை அன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து”

எனும் குறட்பாக்கிணங்க இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன் புலம்பெயர் தேசத்தில், சொல்லொணாத் துயர்களுக்கு மத்தியில் வாழும் ஈழத்தமிழ்க்குமுகாயம் தாய்மொழியை வளர்த்து, வருங்கால சந்ததியினருக்குப் புகட்டும் எண்ணக்கருவில் முன்னெடுத்த முயற்சிகளின் பயனால் உருவானவையே தமிழாலயங்கள்.

அந்த வகையில் ஜேர்மனிய நாட்டில் தாய்மொழியாம் தமிழையும், தமிழ்க்கலைகளையும், தமிழ்ப்பண்பாட்டு விழுமியங்களையும் பேணும் வகையில் அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவரும் மூத்தவருமானவர் மதிப்பிற்குரிய நாகலிங்கம் ஐயா அவர்கள்!

எமது தமிழாலயமானது கல்வி, கலை, விளையாட்டு என்பவற்றால் உயர்ந்து பெருவிருட்சமாக வளர்ச்சி அடைந்துள்ளது.  அத்துடன் ஜேர்மனிய நாட்டில் முதன் முதலாக அதி கூடிய மாணவ ஆசிரியர்களையும், புலமை மிக்க மாணவர்களையும் உருவாக்கியது எமது தமிழாலயம் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

இத்தகைய வளர்ச்சிக்கு மத்தியில் இத் தமிழாலயத்தின் 21வது ஆண்டு நிறைவு விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் புடை சூழ, பெரு வரவேற்புகளுக்கு மத்தியில் தமிழேந்தல் திரு.நாகலிங்கம் ஐயா அவர்கள் தமது பாரியாருடன் தளர்ந்த வயதிலும்,தளராத துணிவோடு கலந்து சிறப்பித்தமையும் ,அவர் ஆற்றிய சிறப்புரையில் கூறிய ஆலோசனைகளும், ஆசிகளும் வரலாறு காணாத பெரு மகிழ்விற்குரிய பதிவுகள் ஆகிவிட்டன.

எனவே மூவேந்தர் முச்சங்கம் அமைத்து கட்டிக்காத்த தமிழ்மொழியை அனைத்து தமிழ் உள்ளங்களும் ஒருங்கிணைந்து வளர்த்திடுவோமாக!

“பேர்லின் தமிழாலயத்தின் புலமை உலகெங்கும் பரவட்டும்”

நன்றி
நிர்வாகம்
தமிழாலயம்