தமிழ்மொழி அரையாண்டுத்தேர்வு 2018
ஐயாயிரம் ஆண்டுகளிற்கு முன்பே இலக்கணம் பெற்ற இனிய, எளிய, சிறந்த, பழைய, தனித்த மொழி எம் தாய்மொழி தமிழ். இந்த தாய்மொழியை திறம்பட மாணவச்செல்வங்களிற்கு, அனுபவமிக்க ஆசான்களால் நீண்டகாலமாகப் போதித்து வரும் பேர்லின் தமிழாலயத்தின் 2017/2018 கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு 27 யனவரி 2018 சனிக்கிழமை அன்று பள்ளி மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இத்தேர்வில் வளர்தமிழ் ஒன்று முதல் பன்னிரண்டு வரையான வகுப்புகளைச் சேர்ந்த நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் அமர்ந்து, தமது திறமைகளை வெளிப்படுத்தினர். எமது தமிழாலய நிர்வாகி திரு பாலச்சந்திரன், உதவி நிர்வாகி திரு. செந்தூரன் கதிர்காமநாதன் ஆகியோரினது நேரடிக்கண்காணிப்பிலும், தமிழாலய நிர்வாகச் செயற்பாட்டாளர்களும், இளைய ஆசிரியர்களுமான செல்வி ருஷந்தியா கதிர்காமலிங்கம், செல்வி ஆர்த்தி பாஸ்கரன், ஆகியோரின் நேர்மையான நடுவத்துடனும் குறிக்கப்பட்ட கால அட்டவணைப்படி ஒழுங்காக இத்தேர்வானது இடம்பெற்றது.
மேலும் இத்தேர்வில் அமர்ந்த அனைத்து மாணவர்களும், மகிழ்வுடனும், உற்சாகத்துடனும் வினாத்தாள்களுக்கு விடைகள் எழுதியதைக் காண்கையில், எமது தமிழாலயத்தில் சிறந்த கற்பித்தற் செயற்பாடுகளும், பெற்றோரின் ஒத்துழைப்பும் ஒழுங்கே கிடைத்துள்ளது என்பது புலனாகிறது. எனவே இனிவரும் காலங்களிலும் இவ்வாறான நெறிப்படுத்தலின் கீழ் இளம்பிஞ்சுகள் தொடர்ந்தும் தாய்மொழி கட்டுப்பாட்டின் வழியில் தொடர்ந்தும் மிளிர, அனைவரும் ஒருமித்து செயற்படுவோமாக.
தமிழால் தரணியில் இணைந்திடுவோம்.
நிர்வாகம்,
தமிழாலயம் பேர்லின்