தமிழ்த்திறன் போட்டி மார்கழி 2019

By / 12. June 2024 / Allgemein / No Comments
தமிழ்த்திறன் போட்டி மார்கழி 2019

பேர்லின் தமிழாலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் தமிழ்த்திறன் போட்டி இவ்வாண்டும் 07.12.2019 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது. இப்போட்டிகளில் வயதுப்பிரிவு நான்கு முதல் வயதுப்பிரிவு இருபது வரையான அனைத்து நிலைகளிலும் நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐந்நூற்றி எழுபதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்குபற்றி, தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இப்போட்டிகளில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள், உரையாற்றல், கவிதைகள், சொல்வதெழுதல், உறுப்பமைய எழுதல், வாசித்தல், கட்டுரை, ஓவியம் என்பன இடம்பெற்றன. அனைத்து மாணவர்களும் மிக சிறப்பாக போட்டிகளில் பங்குபற்றினர். இவ்வாறான தமிழ்த்திறனாற்றல் போட்டிகளினூடாகவே பல தமிழ்ப்புலமை மிக்க மாணவர்களை எமது தமிழாலயம் உருவாக்கித் தந்தது என்றால் மிகையாகா.

மேலும் இத் தமிழ்த்திறன் போட்டிகளில் அனைத்து வயதுப்பிரிவிலும் பங்குபற்றிய மாணவர்களுக்கு தமிழாலய ஆசிரியர்களால் பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் தமிழாலய நிர்வாகத்தினர் தமிழ்த்திறன் பிரிவினரின் ஒருங்கிணைப்பிலும், தமிழாலய ஆசிரியர்களினது ஒத்துழைப்பிலும் மிகவும் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் நடைபெற்ற, இப் போட்டிகள் சுமார் பத்து மணித்துளிகள் நடைபெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர் தேசத்தில் பன்முக கலாச்சாரங்களிற்கும், வாழிட மொழி கல்வித்திட்டங்களிற்கு மத்தியிலும், இத்தகைய போட்டிகளினூடாகவே மாணவர்கள் தமது தாய்மொழியாற்றலை வெளிப்படுத்தலாம். இதற்கு மாணவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நன்றி கூறுவதோடு, மென்மேலும் உலகின் மூத்த மொழியாம் தாய்மொழி தமிழை வளர்ப்பதற்கு அனைவரும் அரும்பாடுபடுவோமாக.

“தமிழால் தரணியில் இணைந்திடுவோம்”