அரையாண்டுத் தேர்வும் விசேட மதிப்பளிப்பும் 2019

By / 16. April 2024 / Allgemein / No Comments
அரையாண்டுத் தேர்வும் விசேட  மதிப்பளிப்பும் 2019

கீழையுலக மொழிகட்கு மூலமாகவும், மேலையுலக மொழிகட்கு மூச்சாகவும், உலக மொழிகட்குத் தாயாகவும் விளங்கும் மூலமொழி தமிழ்மொழி எனும் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் கூற்றிற்கிணங்க, இன்று மிடுக்குடன் மணம் வீசும் மொழியாக மிளிரும் தமிழ் எம் தாய்மொழி என்பதில்  தமிழராகிய ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்வோம்.

அந்த வகையில் எமது மொழியின் சிறப்பை பல்வேறு உலகளாவிய ஆய்வுகளும் எடுத்தியம்பும் தருணத்தில் நமது வாழிட அரச அமைப்புகளாலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது யாமறிந்தே. இந்த அடிப்படையில் பேர்லின் மண்ணில் இருபத்தாறு ஆண்டுகள் கடந்து தமிழ்ப்பணியாற்றும் எமது தமிழாலய செயற்திட்டங்களை நுணுக்கமாக உற்று நோக்கி, அதன் வழியில் பல்வேறு சிறப்புத்  திட்டங்களை வழி வகுத்துத் தந்துள்ளார்கள்.

மேலும் எமது மொழிக்கு ஜேர்மன் ரீதியில் சிறப்பு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற திண்ணத்துடன் நாம் பற்பல செயற்திட்டங்களை ஆற்றி வருகையில், எமது தமிழாலய மாணவர்கள் தாய்மொழி கற்று, தேர்வுகளில் தோற்றி, பெறப்படும் முடிவுகளிற்கு சிறப்புச் சான்றிதழ்கள் அரச அங்கீகாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்றுக் கொள்ளும் வகையில் அனுமதி கிடைத்தமை பெருவரவேற்பிற்குரிய விடயமாகும். அத்துடன் ஆண்டு பன்னிரண்டு நிறைவு செய்யும் மாணவர்களிற்கு, அவர்களின் கடந்த ஐந்து வருட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சிறப்புச் சான்றிதழ்கள் வழங்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படியான விசேட மதிப்புகளுடன் விளங்கும் எமது தமிழாலயத்தின் 2018/2019 கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு 09.02.2019 சனிக்கிழமை அன்று தமிழாலய நிர்வாகத்தினரால் நேர்மையாக நடாத்தப்பட்டது. தொடர்ந்து இத்தேர்வில் சித்தியடைந்த மாணவர்களிற்கு சான்றிழ்கள் தமிழ்மொழி மற்றும் அரசமொழிகளின் உள்ளடக்கத்துடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டு, 04.05.2019 சனிக்கிழமை அன்று எமது தமிழாலய மண்டப முன்றலில் வகுப்பாசிரியர்களால்  வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. இச்சான்றிதழ்களை மழலையர் நிலை முதல் ஆண்டு பன்னிரண்டு வரையான நூற்றுக்கு மேற்பட்ட  மாணவர்கள்  பெற்றுக்கொண்ட விடயம், எமது தமிழாலயத்தின் சிறந்த கற்பித்தற் செயற்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

இது மட்டுமல்லாமல் கடந்த அரையாண்டில் ஒழுங்காக தமிழாலயத்திற்கு சமூகமளித்த மாணவர்களிற்கு சிறப்புக் கௌரவிப்பும் இடம்பெற்றது. இம்மதிப்பளிப்பு நிகழ்வினை இளைய ஆசிரியர்களும், நிர்வாகத்தினரினதும் இணைந்து நடாத்தியமையும், மாணவச்செல்வங்களின் உள்ளக்களிப்பும் “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்- இன்பத்தமிழ் எங்கள் அசந்திக்கு சுடர் தந்த தேன் ” எனும் பாவேந்தர் கூற்றை தெளிவாக்குகிறது.. எனவே புலத்தில் நம் தாய்மொழி  அரியணை ஏற அனைவரும் அரும்பாடுபடுவோமாக:-

“தமிழால் தரணியில் இணைந்திடுவோம்”

நன்றி

நிர்வாகம்
தமிழாலயம் பேர்லின்