வீறு நடை போடும் மூன்றாவது முத்தமிழ் மாலை 2017

By / 20. October 2021 / Allgemein / No Comments
வீறு நடை போடும்  மூன்றாவது முத்தமிழ் மாலை 2017

வீறு நடை போடும் தமிழ் இளவர் ஒன்றியமும் மூன்றாவது முத்தமிழ் மாலையும் 2017

பேர்லின் நகரில் மூன்று தசாப்தங்களிற்கு மேலாக, தமிழ் மக்களுக்கு பற்பல நற்பணிகள் ஆற்றி வரும் ஜேர்மன் தமிழர் ஒன்றியத்தின் விரிவுபட்ட செயற்பாடுகளில் ஒன்று அண்மையில் உருவான தமிழ் இளவர் ஒன்றியம்.இங்கு பிறந்து வளர்ந்த தமிழ்க்குழந்தைகளின் கலைத்திறன்களை வளர்ப்பதற்கும்,மூத்த தமிழர் கட்டிக்காத்த முத்தமிழைப் பேணவும், தாயகத்தில் வாழும் தொப்புள்கொடி உறவுகளின் வாழ்வாதரங்களைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்குமென, நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில், கடந்த 2015 ம் ஆண்டு தமிழ் இளவர்களை இணைத்து உருவாக்கப்பட்டதே இவ்வமைப்பு. அத்துடன் இவ்வமைப்பிற்கென ஓர் அடையாள முத்திரையும், கீதமும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்விளவர் ஒன்றியத்தின் பொதுநல செயற்பாடுகளில் ஒன்று ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் முத்தமிழ்மாலை நிகழ்வு. பேர்லின் வாழ் இளங்கலைஞர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரவும், ஊக்கப்படுத்தவுமென எந்தவித நுழைவுக்கட்டணமுமின்றி இந்நிகழ்வு நடாத்தப்பட்டு வருவது யாமறிந்த விடயம். அந்த வகையில் இவ்வாண்டிற்கான முத்தமிழ் மாலை 2017 நிகழ்வானது 09.06.2017 வெள்ளிக்கிழமை அன்று Gemeinschaftshaus Lichtenrade மண்டபத்தில் வெகுவிமரிசையாக, பெருந்திரளான அவையோர் முன், பலத்த கரகோசங்களிற்கு மத்தியில் பெரு மகிழ்வுடன் மூன்றாவது தடவையாக அரங்கேறியது.

ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமாகிய விழாவை தண்ணுமை இசை, பண்ணிசை, திரையிசை, திரைநடனம், இலக்கிய நாடகம், குமூக நாடகம், பாட்டுக்குப்பாட்டு எனப் பற்பல நிகழ்வுகள் அலங்கரிக்க, அறுசுவை உணவுகளும், விருந்தோம்பலும் அணி சேர்த்தன.இறுதி நிகழ்வாக முத்தமிழ்மாலையை ஆதரிக்கும் முகமாக சில நல்லுள்ளங்களால் அன்பளிப்பாக வழங்கிய பொருட்களுக்கான அதிஷ்டலாபச்சீட்டு குலுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் எல்லோர் இதயமும் இன்பமழையில் நனைய விழா இனிதே நிறைவேறியது. அது மட்டுமல்லாமல் இளவர்களினதும், பெற்றொர்களினதும் ஒத்துழைப்புகளால் நடைபெற்ற இவ்விழாவிற்கு பல்வகை உதவிகள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

இவ்வாறான ஒருமித்த செயற்பாடுகள் மூலமே நாம் நமது மொழியையும், இன்கலைகளையும் பேணலாம். எனவே இனி வரும் காலங்களில் இன்னும் பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை இவ்வரங்கில் வெளிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். வாழ்க முத்தமிழ்!! வளர்க முத்தமிழ் மாலை!

“கடமையைச் செய் பலனை எதிர் பாராதே”

தமிழால் தரணியில் இணைந்திடுவோம்

நன்றி

நிர்வாகம்

ஜேர்மன் தமிழர் ஒன்றியம்